கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், கெம்மாரம்பாளையம் உள்ளிட்டப்பல்வேறு பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கர்களில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பனப்பாளையம் புதூர் பகுதியில் பயிரிட்டிருந்த சுமார் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. குலை தள்ளி, அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில், "அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் வாழைகளை அகற்றுவதற்குக் கூட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற சிவலிங்கம் சிலை பறிமுதல்!