கோயம்புத்தூர்: பிள்ளையார் புரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். தற்போது குடும்பச்சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு தனியார் டிராவல்ஸ் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் போது, உடன் படித்த குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் (21) என்பவரை காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் இளம் பெண்ணின் பெற்றோர் இதற்கு மறுப்புத் தெரிவித்ததால், அந்த இளம்பெண் ஸ்ரீராமுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீராம், அந்த இளம் பெண் வேலை செய்யும் இடத்திற்கு பார்க்க நேரில் சென்றுள்ளார்.
அங்கு அந்த இளம்பெண் தனியாக இருந்த நிலையில், தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு அந்த இளம் பெண்ணின் முகத்தில், குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த அந்தப் பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பின் தகவலறிந்து வந்த போத்தனூர் போலீசார் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீராம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்த இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.