கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த முகாசிமங்கலம் பகுதியில், காட்டுப் பன்றியை சிலர் வேட்டையாடி இருப்பதாக மதுக்கரை வனச்சரகர் சந்தியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், வனவர் ஐயப்பன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று, வேலுச்சாமி என்பவரது வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது குக்கரில் காட்டுப் பன்றி கறியை சமைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், வேலுச்சாமி வீட்டில் வேறு ஏதேனும் வன விலங்குகளின் பாகங்கள் உள்ளதா என சோதனை செய்துள்ளனர்.
அப்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகள் இருப்பதையும் வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர், சட்ட விரோதமாக வெடி பொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக வேலுச்சாமியை கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட வேலுச்சாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட வேலுச்சாமியிடம் வனத்துறையினர் இன்று (டிச.17) விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும், வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி எங்கு வாங்கப்பட்டது, யார் தயாரிக்கிறார்கள் என்பது குறித்தும், நாட்டு வெடியை வைத்து என்னென்ன வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டது என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் கேப்சூல் மூலம் கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!