கோவை: திருநங்கைகள் என்றாலே சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும், ஏளன பேச்சுக்கு உள்ளாகுபவர்களாகவும் பார்க்கப்படுகிறது. வீட்டிலும் பொதுவெளியிலும் அவமரியாதையாக நடத்தப்படுவதால் வாழ்வாதாரத்திற்காக சாலையோரங்களில் பிச்சை எடுத்தும், பாட்டுப்பாடியும் பிழைத்து வருகின்றனர். தற்போது தான் ஒரு சில திருநங்கைகள் கல்வியில் சிறந்து விளங்கி அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிகளில் சேர்ந்து, தங்களது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் வேலைவாய்ப்பின்றி சாலையோரங்களில் வசித்து வந்த திருநங்கைகளை ஒன்றிணைத்து கல்கி சுப்பிரமணியம் ( திருநங்கை) என்பவர், பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சமையல் தொழில் கற்றுக் கொடுத்து சிறந்த சமையல் கலைஞர்களாக உருவாக்கியுள்ளார்.
இதன் அடுத்த கட்டமாக அவர்களுக்குள் இருக்கும் சமையல் கலையை அனைவரும் அறியும் விதமாக பாலக்காடு சாலையில் உள்ள அரிமா சங்கத்தில் திருநங்கை உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் சுமார் 17 திருநங்கைகள் பிரியாணி, சில்லி சிக்கன், முட்டை மசாலா, பெப்பர் சிக்கன், பாயாசம் உட்பட 20 வகையான ருசியான உணவுகளை சமைத்திருந்தனர்.
திருநங்கைகள் சமைத்த உணவுகளை பலதரப்பட்டோர் குடும்பத்துடன் வந்து உண்டு ரசித்து வாங்கிச் சென்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் சமையல் கலையில் சிறந்து விளங்கி வருகிறார்கள். நிலாமா எனும் திருநங்கை முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி அவர்களுக்கு உணவு சமைத்து பரிமாறியவர்.
எனவே. அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக திருநங்கை உணவுத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. சமையல் தொழிலில் ஈடுபட்டுள்ள திருநங்கைகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதே போல் கானா பாடலில் புகழ்பெற்ற கானா விமலா என்பவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கானா பாட்டு பாடி நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
இதையும் படிங்க:மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன் - சிபி ராதாகிருஷ்ணன்