உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையளிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில். வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கும் மக்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவ்வப்போது வெளியே வருவதை அரசுகளாலும் கட்டுப்படுத்த முடியாமலே போகிறது. இப்படி இருக்கையில் துள்ளித்திரியும் வயதிலுள்ள குழந்தைகளை வீட்டிலேயே அடைத்துவைப்பது பெற்றோர்களால் இயலாத காரியமே.
கரோனா விடுமுறை குழந்தைகளைப் பொறுத்தவரையில் கோடை விடுமுறையாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. கோடை விடுமுறையை விளையாடியே கழித்த தலைமுறையான 90'ஸ் கிட்களும் தற்போது விடுமுறை கொண்டாட்டத்தில் பங்கெடுத்திருப்பதால் மீண்டும் சில விளையாட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், கோடை காலம் என்பதாலும் பகல் பொழுதினை மொபைல் போன்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கழிக்கும் குழந்தைகள், மாலை நேரங்களில் உடலினை விளையாட்டுகள் மூலமாக உறுதிசெய்கின்றனர். இவர்களுடன் அவ்வப்போது பெற்றோர்களும் இணைந்துகொண்டு உற்சாகமளிக்கின்றனர்.
மேலும், மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி சமூக இடைவெளிகளை கடைபிடிக்கும் விதமான விளையாட்டுகளான ஏழுகல், கோலிக்குண்டு, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளும், இறகுப்பந்து போன்ற விளையாாட்டுகளும் குழந்தைகள் விளையாடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதன்காரணமாக, குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் புத்துணர்ச்சி பெறுவர் என மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், காலை முதலே தொலைக்காட்சிகளிலும், மொபைல் போன்களிலும் மூழ்கியிருக்கும் பிள்ளைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கவே மாலை நேரங்களில் தங்களுடைய மேற்பார்வையில் விளையாட அனுமதிக்கிறோம். கரோனா அச்சுறுத்தல் அதிகளவில் இருப்பதால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் விளையாட்டுகளே ஊக்குவிக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கின்றனர்.
இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல தங்களுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும், தாங்களும் சில நேரங்களில் குழந்தைகளுடன் இணைந்து விளையாட்டுகளில் பங்கெடுப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
விடுமுறை காலங்களில் குழந்தைகள் உடலளவிலும், மனதளவிலும் உறுதியாக இருப்பதற்கு மொபைல் போன்களைத் தவிர்த்து விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் நேரத்தை செலவிட பழக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திவரும் நிலையில் பெற்றோர்களும் குழந்தைகளுக்காக தங்களது நேரத்தினை முற்றிலும் செலவிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: ஊரடங்கு விடுமுறை : பள்ளி வழங்கும் டாஸ்க்குகளை செய்யும் மாணவர்கள் !