கோயம்புத்தூரை அடுத்த தமிழ்நாடு - கேரளா எல்லையான ஆனைகட்டி பகுதியில், வாயில் காயத்துடன் கூடிய உடல்நலக் குறைவோடு சுற்றித் திரியும் எட்டு வயது காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க இரு மாநில வனத்துறையினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தமிழ்நாடு வனப்பகுதியில் ஏழு குழுக்களும், கேரள வனப் பகுதியில் நான்கு குழுக்களும் என மொத்தம் 11 குழுக்கள் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் அட்டப்பாடி வனப் பகுதியில் உள்ள புதூர் என்ற இடத்தில் அகழி வனச்சரகர் பிஜூ தலைமையில் வன ஊழியர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிஜூ, “கேரள வனப்பகுதியில் காட்டு யானையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நான்கு குழுக்களில் 50 வனத்துறையினர் கேரள வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதுவரை காட்டு யானை கேரள வனப்பகுதியில் தென்படவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. காட்டு யானையால் தண்ணீர் முழுமையாக குடிக்க முடியவில்லை” என கூறினார்.
தொடர்ந்து தமிழ்நாடு வனப்பகுதியில் இரண்டாவது நாளாக ட்ரோன் மூலம் யானை தேடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில், “கேரள மாநில வனத்துறையினருடன் தகவல்களை பரிமாறிக் கொண்டு யானையை தேடும் பணியானது இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது.
கோவை மண்டல வனத்துறை அலுவலர் ராமசுப்பிரமணியம் தலைமையில் 5 வனச்சரகர்கள் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளான இன்று ஆனைகட்டி கோபநாரி பகுதியில் காட்டு யானையை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது.
டிரோன் கேமரா மூலமும் காட்டுக்குள் சென்ற உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது. இதனிடையே டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து கலீம் என்ற கும்கி யானை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் டாப்சிலிப்பில் இருந்து முத்து என்கிற அரிசிராஜா கும்கி யானையை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காட்டு யானைகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவோ அல்லது மரக்குச்சிகள் குத்தியதாலோ காட்டு யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டிருக்கலாம். யானை சிறிது சோர்வுடன் இருந்தாலும் தொடர்ந்து வனத்திற்குள் நடந்து கொண்டே இருக்கிறது” என கூறினார்.
இதையும் படிங்க: காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க ட்ரோன் மூலம் வனத்துறை தேடுதல் வேட்டை