திண்டுக்கல் மாவட்டம், மோளப்பாடியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். பொறியியல் பட்டதாரியான இவர், ஸ்ரீபெரும்பத்தூரை அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
அப்போது தனது தந்தையின் கனவு வாகனமான ’ராயல் என்ஃபீல்டு’ இருசக்கர வாகனத்தை நந்தனத்தில் உள்ள ஒரு ஷோ ரூம் மூலம் மாதத் தவணையில் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் வாகனம் வாங்கி மூன்று மாதங்களுக்குள் ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக, ஷோ ரூமில் கூறியபடி குரோம்பேட்டை பகுதியில் உள்ள சர்வீஸ் சென்டரில் பழுது பார்க்க தனது வண்டியைக் கொடுத்துள்ளார். ஆனால், 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதால் வாகன விபத்துக் காப்பீடு மூலமாக பணத்தைப் பெற்று தனது வாகனத்தை சரிசெய்து விடலாம் என நினைத்த அவர், ஷோ ரூமை அணுகி, விபத்துக் காப்பீடு மூலம் இழப்பீடு பெறத் தேவையான அனைத்து ஆவணங்களை கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த வருடம், டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி, பல முறை கேட்டும் ஷோ ரூம் நிர்வாகிகள் இதுகுறித்து உரிய பதில் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர், கரோனா வைரஸ் பரவல் காரணமாக சொந்த ஊர் திரும்பிய பிறகும் தொலைப்பேசி மூலமாக ஷோ ரூம் நிர்வாகிகளை அவர் தொடர்ந்து தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். ஆனால், கரோனாவைக் காரணம் காட்டி சரியாக பதிலளிக்காமல் அவர்கள் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பு சென்னை வந்த சுகுமார், நேரடியாகவே ஷோ ரூமில் விசாரித்தபோது, ஊழியர்கள் அவரை உதாசினப்படுத்தி, கேலி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுகுமார், தனது உறவினர் ஒருவருடன் இணைந்து ஷோ ரூம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேரமாக போராட்டத்தில் ஈடுப்பட்ட அவர்கள் இருவரையும் ஒருவழியாக சமாதானம் செய்த ஷோ ரூம் நிர்வாகிகள், திங்கள் கிழமை காப்பீட்டுத் தொகை தருவதாக உறுதியளித்துள்ளனர் .
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வெறும் டீயை மட்டும் சாப்பிட்டு, தங்குவதற்கு இடம் இல்லாமல் பிளாட்பாரத்திலேயே தான் தங்கி இருப்பதாகவும், நாளையும் பணத்தை தரவில்லை என்றால் புல்லட் வாகனத்தைப் பெறும்வரை ஷோ ரூம் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட இருப்பதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் தோன்றி மோசடி - பெண்ணிடம் ஏமாந்த ஐடி ஊழியர்