புதுச்சேரி: 1945ஆம் ஆண்டு ஜெர்மனியிடம் இருந்து பிரான்ஸ் மற்றும் நேச நாடுகள் வெற்றி பெற்று 77ஆண்டுகள் ஆகின்றன. இதை நினைவுகூரும் விதமாக, இரண்டாம் உலகப்போரின்போது உயிர் நீத்தவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை சாலையிலுள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவு சின்னத்தில் இன்று (மே 08) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருநாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு போரில், உயிரிழந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் புதுச்சேரி பிரெஞ்சு தூதரக அதிகாரி கரோல் ஜோஸ், துணை கான்சல் ஜெனரல் மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் ஆகியோர் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பிரெஞ்சு முன்னாள் ராணுவ வீரர்கள் புதுச்சேரியில் வாழும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தாஜ்மஹால் இந்து கோயிலா? 20 அறைகளை திறக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு!