சென்னை: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலையை கண்டித்தும், விடுதலையை ரத்து செய்து சிறையில் அடைக்கக்கோரியும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பில்கிஸ் பானு வழக்கில் 11 நபர்களின் விடுதலையை ரத்து செய்ய வேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர்.
2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது ‘கோத்ரா ரயிலில் கரசேவகர்கள் எரிக்கப்பட்டார்கள்’ என்று கூறி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவாரங்கள் இஸ்லாமியர்களை வேட்டையாடின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பச்சிளங் குழந்தைகள் கொல்லப்பட்டனர், கர்ப்பிணிப் தாயின் வயிற்றைக் கிழித்து, கர்ப்பப் பையிலிருந்த சிசுவை எடுத்து எரித்துக் கொன்றனர்.
இஸ்லாமிய பெண்கள் பலர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்", என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான டாக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு தன் 3 வயது குழந்தையுடனும், குழந்தை பிரசவித்து இரண்டே நாளான தனது சித்தப்பா மகள் உட்பட 14 பேருடன் வீடுகளை விட்டு வெளியேறி அங்குமிங்கும் அடைக்கலம் தேடி அலைந்துவிட்டு, இறுதியாக வயல் வெளியில் ஒளிந்து கொண்டனர்.
அங்கும் தேடி வந்து கண்டுபிடித்த காவி கலவரக் கும்பல், 5 மாத கர்ப்பிணி என்று கூறி அழுத போதும் பில்கிஸ் பானுவையும் பிரசவித்து இரண்டு நாளே ஆன தனது சிசுவை காண்பித்துக் கெஞ்சிய அவரது சகோதரியையும் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினர். இரண்டு நாள் சிசுவையும், மூன்று வயது குழந்தையையும் ஷைலேஷ்பாய் பட் என்பவன் தரையில் அடித்தே கொன்றான். அவர்களோடு ஒளிந்திருந்த உறவினர்கள் 14 பேரும் கொன்று குவிக்கப்பட்டனர் என்றார்.
மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுவதை யொட்டி, பாதகம் செய்தவர்களை விடுதலை செய்து நீதியைக் கொன்றது குஜராத் அரசு. நன்னடத்தை அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கான விதிகளை ஒன்றிய அரசாங்கம் கடந்த ஜூன் 10 ஆம் தேதி அன்று வெளியிட்டது. அதில், மிகத்தெளிவாக ‘பாலியல் வன்புணர்வு, போக்சோ, வரதட்சணைக் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படக்கூடாது’ என்று தெரிவித்துள்ளது.
இதன் உள்ளார்ந்த பொருள் பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; அவை குற்றங்களிலேயே கொடூரமான குற்றம் என்பதே என தெரிவித்த அவர் பில்கிஸ் பானு என்கிற ஒற்றைப் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதியல்ல. ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கு, குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி என கூறினார். உச்சநீதிமன்றம் நீதியின் பக்கம் நின்று குற்றவாளிகளை விடுதலையை ரத்து செய்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்து பெண் உள்பட 2 பேர் வெட்டிப்படுகொலை... தூத்துக்குடியில் பயங்கரம்