சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் கருணாநிதி (36). இவர் தனது அம்மா, தங்கை, தங்கையின் 10 வயது மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப் 30ஆம் தேதி கருணாநிதி சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனது தங்கை, கணவனை இழந்து அவளின் 10 வயது மகனுடன் தனது வீட்டில் வசித்து வருவதாகவும், அதிகாலை முதல் காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவரின் வீட்டருகே நடந்து சென்ற அப்பெண்ணை யாரோ காரில் அழைத்துச் செல்வது தெரியவந்தது. காரில் பெண்ணை அழைத்துச் சென்ற நபர் அதே பகுதியில் டீக்கடையில் வேலை பார்க்கும் சக்திவேல் (41) என்பதும் அவர் அப்பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி பல நாள் பின்னால் திரிந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கடந்த மே 1ஆம் தேதி சக்திவேல் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அப்பெண்ணை விரும்பியதாகவும், வேலூருக்கு அழைத்துச் சென்று சிவன் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாக ஒப்புக்கொண்டார்.
இதற்கு தனது நண்பர்களான ராஜி, கோபி, இனியன் ஆகிய 3 பேரின் உதவி செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார். பின்னர் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சக்திவேல் வற்புறுத்தி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், சக்திவேலுக்கு உதவிய ராஜி, கோபி, இனியன் ஆகிய மூவரையும் காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த மூவரையும் காவல் துறையினர் நேற்று (மே 17) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காப்பீட்டு நிறுவன ஊழியரை கடத்திய சம்பவம்: தம்பதி புகார்