கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அருகே அரசு பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவேரிப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் உசேன்(47) என்பவர் பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில், மன ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்கள் இது குறித்து கவேரிப்பட்டினம் நகர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து, பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: நெல்லையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..பேராசிரியர் போக்சோவில் கைது! |
புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட கல்வி அலுவலர் ராஜன், காவல் துணை கண்காணிப்பாளர் முத்து கிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதில், ஆசிரியர் மாணவரிடம் பாலியல்ரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து காவேரிப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை போக்சோவில் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த சில மாதங்களில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் அரசு பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.