சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநகரின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை பயோ மைனிங் முறையில் மறு சீரமைப்பு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தனியார் நிறுவனத்தின் மூலம் இலவச வைஃபை வசதி அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிக்காக தனியார் பட்டா நிலங்களை நில எடுப்பு நடவடிக்கை மூலமாகவும்,அரசு நிலங்களை நில உரிமை மாற்றம் செய்திடக் கோரி அரசின் நிர்வாக அரசாணை கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளை புதுப்பிக்கும் பணி, புதிதாக கட்டும் பணிகள்,எரிவாயு தகன மேடை கட்டும் பணிகள் மற்றும் இதர பராமரிப்பு பணிகளுக்கான மதிப்பீடுகளுக்கு திருத்திய நிர்வாக அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. சென்னையில் 10 மண்டலங்களில் மாநகராட்சிக்குட்பட்ட காலியாக உள்ள திறந்தவெளி நிலங்களில் புதிய பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் அமைக்கும் பணிக்கு பணி ஆணை வழங்கும் தீர்மானம் உட்பட 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை...