சென்னை: இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது, சைவ மடத்திலிருந்து தான் செங்கோல் கொடுத்தோம். அதன் அடிப்படையிலேயே தற்போது நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு, கைலாய பரம்பரை சைவ ஆதீனங்கள் வரவழைக்கப்பட்டதாக, ஆதீனங்கள் கூட்டாகத் தெரிவித்து உள்ளனர்.
டெல்லியில் நேற்று முன்தினம்(மே 28) நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில், தமிழ்நாட்டிலிருந்து 20 ஆதீனங்கள் மத்திய அரசு ஏற்பாடு செய்த தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். இந்த நிகழ்வில் 20 ஆதீனங்கள் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்த மூன்று நாட்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. அவர்களின் உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் நேரத்தைச் சிறப்புக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆதீனத்தின் தலைமை அதிகாரிகளையும் தனித்தனியாகக் கலந்தாலோசித்து உணவு தயாரிக்கச் சிறப்பு உணவு வழங்குநர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில், தமிழ் மறைகள் முழங்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை, மதுரை உள்ளிட்ட 20 ஆதீனத் தலைவர்கள் செங்கோலைப் பிரதமரிடம் வழங்கினர். பின்னர், அவர்களிடம் ஆசி பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தைத் திறந்து வைத்து, செங்கோலைச் சபாநாயகர் இருக்கைக்குப் பின்புறம் நிறுவினார். செங்கோலை உருவாக்கிய உம்மிடி நகைக்கடை உரிமையாளர்களை, பிரதமர் மோடி கௌரவித்தார். இதனையடுத்து, இந்த வரலாற்று நிகழ்வை நிறைவு செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள், தனி விமானம் மூலம் மகிழ்ச்சியாகச் சென்னை திரும்பினர்.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதீனங்கள், “புதிய நாடாளுமன்றத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த நிகழ்வுக்குத் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்களையும் அழைத்தார்கள். ஏற்கனவே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட செங்கோலை மீண்டும் பிரதமர் மோடியின் கையில் கொடுத்து ஆசீர்வதித்தோம். அதற்குப் புனித கங்கை நீர் தெளிக்கப்பட்டது. ஆதீனங்கள் வந்தது நாங்கள் செய்த பாக்கியம் என்று பிரதமர் மோடி கூறினார். இது தேசிய ஒற்றுமைக்கும் ஒரு வழிகோலாக அமைகிறது.
ஆதீனங்கள் வருகையை அவர் (மோடி) புண்ணியமாகக் கருதி, ஆதீனங்கள் அனைவரையும் தனித்தனியாகச் சந்தித்து மரியாதை செலுத்தி வணங்கிச் சென்றார். பண்பாடு மிக்க பாரத பிரதமரை நாம் பெற்றுள்ளோம். அங்கு சென்ற அனைத்து ஆதினங்களுக்கும் வரவேற்பு சிறப்பாக அளித்தார் பிரதமர் மோடி. தங்குமிடம், உணவு போன்றவற்றில் மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொண்டது எங்களுக்கும் மட்டும் அல்ல தமிழகத்திற்கே பெருமை” என கூறினார்.
வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆதினங்கள், “இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது சைவ மடத்திலிருந்து தான் செங்கோல் கொடுத்தோம். அதன் அடிப்படையிலேயே தற்போது நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சைவ ஆதீனங்கள் வரவழைக்கப்பட்டனர்" என கூறினார்.
இதையும் படிங்க: 8 அணிகளுடன் அதிரடியாக ஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்