சென்னை: சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-எல்1 விண்கலம், இன்று (செப்.2) காலை 11:50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 2 ஆவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்த 64-ஆவது நிமிடத்தில் 648.71 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் தாழ்வு வட்டப்பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விடுவிக்கபட்டது.
நாசா, ஜெர்மனி, ஐரோப்பிய விண்வெளி மையம் என்ற வரிசையில் சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பிய 4ஆவது நாடு என்ற பெருமையை 'இந்தியா' இதன் மூலம் பெறுகிறது. சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆராய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டத்தின் மூலம் மற்றொரு வெற்றியை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. இதன்மூலம், நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ இந்த விண்கலத்தை இன்று அனுப்பியுள்ளது.
ஆதித்யா-எல்1 நெருப்பு பந்தான சூரியனை விண்ணில் இருந்தபடி எப்படி ஆராயப் போகிறது? என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இஸ்ரோ அதற்குண்டான விளக்கம் அளித்துள்ளது. அதாவது, 'ஆதித்யா எல்-1 விண்கலமானது விண்வெளியில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட் என்னும் எல்1 பாயிண்டில் நிலைநிறுத்தப்பட்டு சூரியனை ஆய்வு செய்யும்' என்று இஸ்ரோ தரப்பிலும், பல்வேறு விஞ்ஞானிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம் முதலில் பூமிக்கு வெளியே புவி வட்டப்பாதையில் கொண்டுபோய் நிலை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, நீள்வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் ஆதித்யா-எல்1 விண்கலம், அதன்பிறகு சூரியனை நோக்கி நகர்ந்து பயணிக்க உள்ளது. பூமியில் இருந்து பதினைந்து லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன் புள்ளி 1' என்பதுதான் அதன் இலக்கு.
இதையும் படிங்க: தென்காசியில் இருந்து சூரியனுக்கு புகழை எடுத்து சென்ற பெண் விஞ்ஞானி.. பெருமிதத்தில் சகோதரர்!
முன்னதாக, இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், “சூரியன் - பூமி இடையே சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1இல் விண்கலம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 100 முதல் 120 நாட்களுக்கு ஆகும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
ஆதித்யா எல்1 - 7 அதிசயங்கள்: சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய, ஆதித்யா-எல்1இல் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளன.
ஆதித்யா-எல்1 ஆய்வுத் திட்டத்தின் முழுப் பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது. இதை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) என்ற ராக்கெட் மூலம், இன்று வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. சந்திரயானை தொடர்ந்து இஸ்ரோ விண்வெளியில் தன்னுடைய அடுத்த மைல் கல்லை எட்டி உள்ளது.
இதையும் படிங்க: சவால்கள் நிறைந்த பயணம்!...ஆதித்யா எல்1 விண்கலம் எதிர்கொள்வது எப்படி?... மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்