சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி கூறியதாவது,
"மகாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். குடியரசுத் தலைவர், ஆளுநர் முறையாக செய்யாததை உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. இந்தத் தேர்தல் வெளிப்படையாக நடத்தப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கூறியிருப்பது வரவேற்புக்குரியது. உள்ளாட்சித் தேர்தல் நேரடி தேர்தலாக நடத்தப்பட வேண்டும்.
அஜித் பவார் மீதான 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மோடிக்கு வாக்களித்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பொன். மாணிக்கவேல் நேர்மையான அலுவலர், செல்வாக்குக்கு அடிபணியாமல் சிறப்பாக செயலாற்றி பாரம்பரிய சிலைகளை மீட்டார். அவருடைய சேவை தொடர வேண்டியுள்ளது. அவருக்கு கால அவகாசம் கோரியபோது தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவிக்கிறது.
மடியிலே கணம் இல்லையென்றால் வழியிலேயே பயம் இல்லை. வெங்காய விலையை பற்றி அரசு கவலைப்படவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய வேண்டும்" என்றார்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என செ.கு.தமிழரசன் வழக்கு தொடர்ந்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய கே.எஸ்.அழகிரி, 'முதலமைச்சருக்கும் செ.கு.தமிழரசனுக்கும் இடையே உள்ள உறவு அனைவருக்கும் தெரிந்ததே.
உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கருதினால் அவர் நேரடியாக முதலமைச்சரை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கலாம். முதலமைச்சர் ஆலோசனைப்படி தான் செ.கு.தமிழரசன் வழக்கு தொடர்ந்துள்ளார்' என குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:தன்மானத்தை விட்டுக்கொடுத்த கட்சி அதிமுக - அழகிரி தாக்கு