சென்னை: தமிழ்நாட்டில் கல்வி கற்போரின் எண்ணிக்கை ஒருபக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மறுபக்கம் கல்வி கற்கும் ஆசை இருந்தும், கற்பதற்கு ஏற்ற வசதிகள் இல்லாத காரணத்தால், படிக்காதவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகமாகவே உள்ளது.
அந்தவகையில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னையில் மட்டும் 3 லட்சத்து 87ஆயிரத்து 150 நபர்கள் படிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டது.
கற்போம் எழுதுவோம் திட்டம்
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் 'கற்போம் எழுதுவோம்' என்ற திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 9 ஆயிரத்து 655 படிக்காதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் நோக்கத்துடன் 2020 நவம்பர் மாதம் முதல் 395 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 453 எழுத்துத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.
மேலும் பள்ளிக்குச் செல்லாதவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில், அப்பகுதிக்கு அருகில் இருக்கும் ஆரிரியர்கள், தினமும் இரண்டு மணி நேரம் சென்று கல்வி கற்பித்து வருகின்றனர். இம்முயற்சியின் முதல் கட்டத்தில் 10ஆயிரத்து 83 பேர் பயிற்சி பெற்று தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை கோட்டூர்புரம் நரிக்குறவர் காலனியில், 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தின் கீழ் படிக்காதவர்கள் இருப்பதைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், மத்திய சென்னை மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பயனாளிகள் பகிர்ந்த அனுபவம்
இதையடுத்து 'கற்போம் எழுதுவோம்' இயக்கத்தின் மூலம் பயன் பெற்ற அஸ்வினி, நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம், அவரது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, 'எனக்கு முதலில் எழுதப்படிக்கத் தெரியாது. எங்கள் பகுதிக்கு இரண்டு ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர்.
இதனால் உயிரெழுத்து, மெய்யெழுத்து போன்ற அடிப்படை எழுத்தறிவு பெற்றதுடன், படிக்கவும் கற்றுக் கொண்டோம். எனது கையெழுத்தை நானே ஆங்கிலம் மற்றும் தமிழிலும் போடக் கற்றுக் கொண்டேன்.
நாங்கள் மசாலா விற்கவும், குப்பை பொறுக்கவும் செல்வதால், படிக்க முடியவில்லை. ஆனால், எனக்கு திருமணமான பின்னர், எனது குழந்தைகளுக்கு கற்பிப்பதற்காக ஆர்வமுடன் படித்து வருகிறேன். மேலும் தொடர்ந்து படிக்க எனக்கு விருப்பம் இருக்கிறது’ என்றார்.
இவரைத் தொடர்ந்து 'கற்போம் எழுதுவோம்' இயக்கத்தில் சேர்ந்து அடிப்படை படிப்பறிவைப் பெற்ற மூன்று குழந்தைகளின் தாய் பரிமளா நமது செய்தியாளரிடம், அவரது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது, 'நாங்கள் காலையில் குப்பைப் பொருட்கள் பொறுக்குவது அல்லது மசாலா பொருள்கள் விற்பது போன்ற பணிக்குச் சென்று வருவோம்.
அதன்பின்னர் வீட்டு வேலைகளை செய்வோம். மாலை நேரத்தில் ஆசிரியர்கள் வந்து தங்களுக்குப் பாடங்களை கற்பித்தனர். இதனால் தமிழின் அடிப்படை எழுத்துகளை கற்றுக் கொண்டுள்ளோம்.
எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். எனது மூத்த மகன் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளான். மற்ற இரண்டு பெண் குழந்தைகளும் நன்றாகப் படிக்கின்றனர். நாங்கள் படிப்பதைப் பார்த்துவிட்டு, தங்கள் பகுதியில் உள்ள மற்றவர்களும் படிக்க ஆர்வமாக உள்ளனர்'' என்றார்.
ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்கள்
இவரை அடுத்து அடையாறு வட்டார வள ஆசிரியர் அனிதா கூறியதாவது, ' 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தின்கீழ் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மூலம் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு அடிப்படை அறிவை கற்றுக் கொடுத்தோம்.
அவர்களும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டுள்ளனர். மேலும் பலர் ஆர்வமுடன் கற்க விரும்புகின்றனர். அவர்களுக்கும் தொடர்ந்து அடிப்படை எழுத்தறிவைக் கற்றுத் தருவோம்' எனத்தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணிக்கு, நரிக்குறவர் இன மக்கள் தாங்கள் தயாரித்த மணிகளை அன்பளிப்பாக, அவர் கழுத்தில் அணிவித்தனர்.
இதையடுத்து இப்பகுதி மக்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
காலம் கணினி காலமாக உருமாறினாலும் நரிக்குறவர் இன மக்களுக்கு கல்வியறிவு இன்னும் கிடைக்காத நிலை உள்ளது.
இந்த நிலை மாறவும், அவர்களின் ஆர்வம் நிறைவேறவும் அரசு தொடர்ந்து, 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதையும் படிங்க: நாய் மீதான பேரன்பின் வெளிப்பாடு: பிஸ்னஸ் கிளாஸ் முழுவதையும் புக் செய்த பெண்!