டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் ஸ்டான்லி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். எனினும் அணையின் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். கடந்த 2016, 2017, 2018 ஆம் ஆண்டு போதிய அளவு மழை இல்லாததால் வழக்கமான தேதியில் நீர் திறக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் காவேரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு அதிக நீர் வரத்து வந்தது. இதனால் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க அதிக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏற்கனவே விவசாயிகள் தங்களது விளை நிலங்களை உழுது தண்ணீருக்காக காத்திருக்கின்றனர். மேலும் இந்த வருடம் சுமார் 17 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணி துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "வழக்கமாக மேட்டூர் அணையில் தண்ணீர் 90 அடி இருந்தாலே குடிநீர் தேவையை பொறுத்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். இந்த வருடம் வட - கிழக்கு பருவமழை முடிந்த பின்னரும் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. எனவே டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். எனினும் எத்தனை கன அடி திறப்பது பற்றி அரசு முடிவு செய்யும் என கூறினார்.
மேலும், ஜனவரி 28-ம் தேதி வரை தண்ணீர் திறப்பு நீடிக்கும். இதுகுறித்து பாரதிய கிசான் சங்க மாநில செய்தித்தொடர்பாளர் என். வீரசேகரன் கூறுகையில்டி, " ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என அரசு விவசாயிகள் மத்தியில் விதை விதைத்துள்ளது. ஏற்கனவே விவசாயிகள் தங்களது கோடை உழவை மேற்கொண்டுள்ளனர். உரிய நேரத்தில் காவேரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டால் விவசாயிகள் நல்ல மகசூலை பெறமுடியும் என தெரிவித்தார்.
" 12 மாவட்டங்கள் டெல்டா பாசனத்தில் ஈடுபடுவதால், குறைந்தது 9,000 கன அடி நீராவது திறக்க வேண்டும். பெரும்பாலான வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்கள் வறண்டு போய் கிடப்பதால் தண்ணீரை அதிக அளவு உறிஞ்சும். இதனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் தண்ணீரை திறக்க வேண்டும் என்கிறார் தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆயிலை சிவசூரியன்.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் இங்கே. மோடி எங்கே?' - ஜோதிமணி கேள்வி