சென்னை டிபி சத்திரம் காவலர் குடியிருப்பில் உளவு பிரிவு தலைமை காவலர் கார்த்திகேயன், காவலர் ஜான் பிரிட்டோ ஆகியோர் இணைந்து சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட முதல்நிலை காவலர் வெங்கடேஷ்வர ராவ் என்பவரை கார்த்திகேயன் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் காயமடைந்த வெங்கடேஷ்வர ராவ் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் காவலர்கள் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. பின்னர் வெங்கடேஷ்வர ராவ் அளித்த புகாரின் அடிப்படையில் வீடியோ காட்சிகளை வைத்து உயர் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் உளவு பிரிவு காவலர் கார்த்திகேயன் குடிபோதையில் வெங்கடேஷ்வர ராவை தாக்கியது உறுதியானது. மேலும் வெங்கடேஷ்வர ராவ் மோதிக்கொண்ட அந்த வீடியோவை பரப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த அறிக்கையை உயர் அதிகாரிகள் காவல் ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் காவலரை தாக்கியதற்காக கார்த்திகேயனையும் , சமூக வலைதளங்களில் மோதி கொண்ட வீடியோவை பரப்பியதற்காக வெங்கடேஷ்வர ராவையும் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் கர்நாடகாவில் உயிரிழப்பு!