மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளனர். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா பெரியார் திடலில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, புதியக் கல்விக் கொள்கை முழுவதும் வார்த்தை ஜாலத்தை வைத்து எழுதியிருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டினார். அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளன என தெரிவித்த அவர், புதியக் கல்விக் கொள்கை முற்றிலும் இடஒதுக்கீட்டை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.
மோடி பிரதமராக பதவியேற்றபோது இந்திய அரசியல் சட்டத்தை கும்மிடு போட்டு வணங்கியதுபோல்தான் கோட்சே காந்தியை கும்மிடு போட்டு கொன்றார் என வீரமணி தெரிவித்தார். கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அணுசக்தி நிபுணரை நியமித்ததைத் தாக்கிப் பேசிய அவர், இருதயத்தில் கோளாறு என்றால் அணுசக்தி நிபுணரிடம் சென்று மருத்துவம் பெறுவீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட நீட் தேர்வு மாநிலங்களுடைய உரிமையை பறிக்கிறது என குற்றம்சாட்டிய வீரமணி, இதனை தமிழ்நாடு மக்கள், இயக்கங்கள் அறிந்து அதற்கான விழிப்புணர்வு பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார்.