தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு நாளான இன்று சென்னை சிம்சனில் உள்ள அவரது உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காக தன் இறுதி நாள் வரை போராடிய பெரியாரின் நினைவு நாளில் சாதி, சமூக நீதி பெண் விடுதலை உள்ளிட்ட கொள்கைகளை வென்றெடுக்க போராடுவோம். இந்தியாவில் சனாதான சக்திகளின் கையில் ஆட்சி உள்ள நிலையில் ஜனநாயகத்திற்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்னும் ஜனநாயக விரோத நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் இணைந்து போராடுவோம். திமுக தலைமையிலான நேற்றைய பேரணியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் காலங்களில் இணைந்து போராடுவோம். மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், அதனுடன் கைகோர்த்துள்ள அதிமுகவிற்கு எதிராகவும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் திமுக கூட்டணி கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக திரும்பப் பெறுவார்கள் என நம்புகிறோம். தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பேரணி தோல்வியடைந்ததாக அவதூறு பரப்பி வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!