காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 'மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்துவரும் நிலையில், தற்போது, அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதியையும் கோரி மோடி அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு சொட்டுத் தண்ணீர் கூட விட முடியாது; மேகதாதுவில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது' என்றுதான் கூறிவருகிறது கர்நாடகம். அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காவிரிப் பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவரைப் பேசவிடாமல் கர்நாடக பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டனர். இப்படிப்பட்ட கர்நாடகம் தான் தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்க அணை தேவை என்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஆணையம் அமைத்து, தமிழ்நாட்டிற்கு காவிரியை மறுத்த கூட்டு சதியாளர்கள்தான் இந்த கர்நாடக, மத்திய பாஜக ஆட்சியாளர்கள். '400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதத்தில் அமைக்கப்படும் இந்த அணை 9 ஆயிரம் கோடி செலவில் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்; இதற்காக 5,252 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும்; அதில் 4,996 ஹெக்டேர் நிலம் நீருக்குள் மூழ்கும்; இதில் 3,181 ஹெக்டேர் நிலம் காவிரி வன உயிர் சரணாலயத்திற்கு உட்பட்டது; 1,869ஹெக்டேர் நிலம் காப்புக் காடுகள்; இந்தத் திட்டத்தில் நீரில் மூழ்கும் 5 கிராம மக்களுக்கு மாற்று வாழ்விடம் அளிக்கப்படும்' என்கிறது கர்நாடகம்.
ஆனால் தமிழகம், “சனாதனம்” என்ற புள்ளியில் ஒன்றிணையும் மோடி அரசும், கர்நாடக அரசும் சேர்ந்து தமிழ்நாட்டின் காவிரி உரிமைக்கே முடிவுரை எழுதும் சதியைப் புரிந்துகொள்ளாமல் இல்லை. மோடி அரசு, அணைக்கான வரைவுத் திட்டத்தை கர்நாடகத்திடம் கேட்டு பெற்றுக்கொண்டது தான் இதற்கு காரணம்!
இயற்கைச் சட்டம், இந்தியச் சட்டம், ஏன் இன்டர்நேஷனல் சட்டத்தையும் மீறி, தமிழகத்தின் காவிரி உரிமையைக் காவுகொள்கிறது சனாதனம்! சனாதனத்தையும் அதன் சதியையும் வேரறுக்காமல் விடமாட்டோம் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!' என்று தெரிவித்துள்ளார்.