சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கோத்தகிரி கோடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக மனோஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் மனோஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீலகிரி நீதிமன்றம், நீலகிரியிலேயே தங்கியிருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தது.
இதனையடுத்து, ஜாமினில் தளர்வுக்கோரி மனோஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், கேரள மாநிலம் திருச்சூரில் தங்கியிருந்து வாரத்தில் இரண்டு நாள்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்திருந்தது. இந்த நிபந்தனையையும் தளர்த்த நீலகிரி நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து, மனோஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது ஒவ்வொரு திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் திருச்சூர் காவல் நிலையத்தில் ஆஜராகி வருவதாகவும், உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மனைவியையும், தனது குழந்தைகளையும் கவனித்து கொள்ள முடியாததாலும், வாரத்தில் இரண்டு நாள்கள் காவல் நிலையம் செல்வதால் கூலி வேலைக்கும் செல்ல பாதிப்பை ஏற்படுத்துவதால் ஜாமீன் நிபந்தனைகளில் தளர்த்த வேண்டுமென கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (செப்டம்பர் 09) தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: பேருந்தில் பெண் குழந்தையை விட்டுச்சென்ற பெண் - சிசிடிவி காட்சி உதவியுடன் போலீஸ் விசாரணை