மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், "கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பெருமழையும், சில பகுதிகளில் வறட்சியுமாகக் கழிந்தது. கையில் இருக்கின்ற பணத்தை முதலீடு செய்து, கடன் வாங்கிய விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. பல இடங்களில் காப்பீட்டுத் தொகைக்குப் பிரிமியம் கட்டியும், காப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை. மதுவின் பிடியிலும் இலவசங்களின் போதையிலும் தமிழ்நாட்டின் இளைய தலைமுறை பாழாகிவருகிறது.
நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். புதுவாழ்வு தர வேண்டும். எவ்வளவு மனச்சுமைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, நம்பிக்கையோடு தைப்பொங்கலைக் கொண்டாடி வருகின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு, மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க, அனைவரும் உறுதி ஏற்போம். தமிழ்நாட்டு மக்களுக்குத் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் கூறியுள்ளார்.