சென்னை: அமெரிக்கா ஒக்லஹாமா பல்கலையுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மாணவர்கள் பரிமாற்றம், தொழில் நுட்ப பரிமாற்றம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் ஸ்டில்வாட்டரில் உள்ள ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டியுடன் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுடெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி இயக்குநரகத்தின் அனுமதி பெற்று மேற்கொண்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வருகை புரிந்து புதிய தொழில் நுட்பங்களை பரிமாற்றிக் கொள்வதாக அமைந்தது.
இதன் விளைவாக, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்-நிறுவன வளர்ச்சி திட்டத்தின் நிதியுதவியுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 10 இளங்கலை மாணவர்கள் நவம்பர் 2019 முதல் ஜனவரி 2020 வரை மூன்று மாதங்களுக்கு ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பயிற்சி பெற்றுள்ளனர். அதேபோல், ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆறு மாணவர்கள் ஜூன் 2019 முதல் ஜூலை 2019 வரை 31 நாட்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவப் பயிற்சி பெற்றனர்.
கரோனா தொற்றுநோயால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பரிமாற்றத் திட்டங்களைத் மேலும் தொடர முடியவில்லை.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலம் 2022ஆம் ஆண்டு முடிவுற இருப்பதால், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த கார்லோஸ் ரிஸ்கோ தலைமையிலான குழு இந்தியாவிற்கு வருகை புரிந்தனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார், ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டி, கால்நடை மருத்துவக் கல்லூரியை சேர்ந்த முதல்வர் கார்லோஸ் ரிஸ்கோ ஆகியோருக்கு இடையே தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்துடன் இணைந்து புதிய ஆராய்ச்சி முயற்சிகளை விரிவுபடுத்துவதில் ஆர்வமாக உள்ளது. ஓரே சுகாதார அணுகுமுறையில் மனிதர்கள்–விலங்குகள்–சுற்றுபுறச் சூழ்நிலை கவனம் செலுத்துதல், மாணவர்கள், பயிற்சியாளர்களுக்கு கூட்டு தொழில்முறை மற்றும் பட்டங்களை வழங்க உரிய திட்டங்களை உருவாக்குதல்; கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு மற்றும் தொடர்புடைய துறைகளில் சிறந்த நடைமுறைகளை உருவாக்குதல் போன்றவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி செலவு விவரங்களை யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் - அமைச்சர் மெய்யநாதன்