சென்னையில் பொது சுகாதாரத்துறை வளாகத்தில் மருத்துவத்துறையின் செயல்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (ஜன.12) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, 108 அவசர எண் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். 108 வாகன மருத்துவப் பணியாளர்கள் முதலுதவி செய்வது குறித்து விளக்கினர்.
மேலும், 108 எண்ணுக்கு வரும் அழைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார். சிலிண்டர்கள் எண்ணிக்கையை தேவையான அளவு பராமரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கரோனா கட்டுப்பாட்டு அறை - அவசர எண் 104 குறித்த விவரங்களை கேட்டறிந்த ஒன்றிய அமைச்சரிடம் அதன் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மருத்துவத்துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையிலும் மத்திய அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: காவல் துறையில் காலிப்பணியிட அறிவிப்பு: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு