சென்னை: திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி ராயபுரத்தில் நேற்று (டிச.12) நடைபெற்றது. ராயபுரம் ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அரிசி , மளிகைப் பொருட்கள், பெட்ஷீட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். கொடுத்து பழக்கப்பட்ட இயக்கம் திமுக என்பதால் இதுபோன்ற ஏழை எளியோருக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு முதல் மாநிலம்
கடந்த அதிமுக ஆட்சியில் ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒருபோதும் நடத்தியதில்லை. கிள்ளி கூட கொடுக்காதவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள், அள்ளிக்கொடுத்து பழக்கப்பட்டவர்கள் திமுகவினர் என இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் நன்கு அறிந்து கொள்கின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் மக்களோடு மக்களாக தொடர்ந்து இயங்கி வருகிறார். பருவமழை காலத்தில் தொடர்ந்து மக்கள் பணியாற்றினார்.
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டினால் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. அதனை மீட்டெடுத்து தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் சிறப்பான பணியாற்றி வருகிறார். இந்தப் பணிகள் தொடர திமுக ஆட்சி அடுத்த 20 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். அதற்கு ஆதரவு கரம் நீட்ட மக்களும் தயாராக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேருந்தில் இறக்கி விடப்பட்ட நரிக்குறவர் தம்பதி ; அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து