இந்தியா - சீனா எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்திற்குமிடையே நேற்று (ஜூன் 15) ஏற்பட்ட சண்டையில் இந்திய ராணுவ அலுவலர் மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில், ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (40) என்பவர் வீர மரணம் அடைந்தார். இவரது உடல் நாளை (ஜூன் 17) சொந்த ஊரான கடுக்கலூர் கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் ஆட்சியர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சீன எல்லையில் வீர மரணமடைந்த பழனிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பழனியின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "சீன ராணுவத்தின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ராணுவ ஹவில்தார் பழனி உள்ளிட்ட மூன்று பேருக்கும் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பழனியின் தியாகத்திற்குத் தலை வணங்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக வீரர் வீரமரணம் - திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்!