சென்னை: தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை விருதுநகரில் நடைபெறும் விழாவில் திறந்து வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ஜனவரி 12ஆம் தேதி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.
அப்போது, பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் சென்று வரவேற்க இருக்கிறார். பிரதமரை வரவேற்கத் தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது.
திமுக கருப்புக்கொடி காட்டுமா?
பிரதமர் ஒவ்வொரு முறை தமிழ்நாடு வந்த போதும் Go Back Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வந்தது, திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தருவதை கடுமையாக எதிர்த்தது, தற்போது ஆட்சியைப் பிடித்து உள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் எதிர்ப்பு வரவில்லை. மேலும், பிரதமர் மோடிக்கு வழக்கம்போல் திமுக கருப்புக்கொடி காட்டுமா? என்று கேள்வி எழுந்தது.
மோடி எங்களுக்கு எதிரி அல்ல
இதற்க்கு பதில் அளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி பதில் அளிக்கையில், "பிரதமர் மோடிக்கு திமுக ஏன் கருப்புக் கொடி காட்ட வேண்டும்? எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டினோம்.
ஆனால், இப்போது நாங்கள் அவரை விருந்தினராக அழைத்து இருக்கிறோம். அவர் தமிழ்நாட்டின் விருந்தினராக வருகிறார். நாங்களே அழைத்துவிட்டு நாங்களே கருப்பு கொடி காட்டினால் அது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும். மோடி எங்களுக்கு எந்த காலத்திலும் எதிரியாக இருந்தது இல்லை. பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல இந்துத்துவா தான் எதிரி" என்று தெரிவித்து இருந்தார்.
Go Back Modi : ட்விட்டர் திடீர் ட்ரெண்டிங்கில் 'கோ பேக் மோடி' பின்னணி என்ன?
இதனையடுத்து, திமுக சார்பில் எதிர்ப்பு பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்படுமா என அதிமுகவினர், நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் விவாதம் செய்து வருகின்றனர். இதற்கு திமுகவினர் எதிர்வினை ஆற்றி வரும் நிலையில், ட்விட்டரில் கோ பேக் மோடி தற்போதே ட்ரெண்டாக தொடங்கி உள்ளது.
திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற திமுக
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அதில், திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற திமுக, “பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
பாஜகவைக் கண்டு பயப்படுகிறார்கள்
எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று; ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என திமுக போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி வருவதற்கு இது இன்னும் ஒரு சாட்சி. இதற்கு முன்பு பிரதமர் தமிழ்நாடு வந்த நேரத்தில் கறுப்புக்கொடி காட்டியதும், ‘Go Back Modi’ என்றதும் தவறு என இதன்மூலம் இப்போது திமுக ஒப்புக்கொள்கிறதா? அன்றைக்கு, ‘இதெல்லாம் தேவையில்லாத வேலை’ என்று சொன்ன எங்களைப் போன்றவர்களைப் பார்த்து.
‘பாஜகவைக் கண்டு பயப்படுகிறார்கள்’ என்று திமுக.வினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் விமர்சித்தார்கள். அப்படியென்றால், இப்போது பாஜக.வையும், பிரதமர் மோடியையும் பார்த்து திமுக பயந்து நடுங்குகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2021ஆம் ஆண்டில் நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்!