தமிழ்நாட்டின் காவல் துறை இயக்குநராக இருந்து வந்த டி.கே. ராஜேந்திரன் ஓய்வை அடுத்து அந்தப் பதவிக்கு ஜே.கே. திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் இருந்து ஜே.கே. திரிபாதி பொறுப்புகளை இன்று பெற்றுக் கொண்டார்.
1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்த திரிபாதி, தற்போது தமிழ்நாட்டின் டிஜிபியாக பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி, கூடுதல் காவல்துறை இயக்குநர்கள் தாமரை கண்ணன், சீமா அகர்வால், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் திரிபாதி கூறுகையில், "பாரம்பரியமிக்க தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்பதில் பெருமிதம் அடைகிறேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கும், குற்றங்களை குறைப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.