சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெறும் தூய்மைப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் கோயம்பேடு சந்தை வளாகத்தை சுத்தம் செய்யும் பணி இனிமேல் தொடர்ந்து நடைபெறும். ஞாயிறு அன்று சந்தையை மூடினால் காய்கறி, பழங்களின் விலை உயரும் அபாயம் இருப்பதை கருத்தில்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி வரை மட்டும் கடைகள் இயங்கும்.
அதன்பிறகு, 12 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தையை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்போது தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 6 ஆயிரத்து 340 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் 600 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு வணிக வளாகத்தில் அடுத்த 10 நாள்களில் அனைத்து வியாபாரிகளும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதன்பிறகு தடுப்பூசி செலுத்தாத நபர்கள் கோயம்பேடு வணிக வளாகத்தில் அனுமதிக்கப்பட மாட்டர்கள்.
மே மாதத்தில் 16 நபர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் தற்போது வரை 2 ஆயிரத்து 500 நபர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், 2 நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடப்படுவதால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருந்தாலும் மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதியிலுள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.