சென்னை: தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் காணப்படுகிறது. கனமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மாதத்தில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வந்தது. அதன் பிறகு படிப்படியாக விலை அதிகரித்தது. இம்மாதத்தின் தொடக்கத்தில் புதிய உச்சமாக தக்காளி விலை கிலோ நூறு ரூபாயை எட்டியது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த வாரம் தக்காளி மொத்த விலையில் 15 முதல் 20 ரூபாய் வரை குறைந்தது. இந்த வாரம் மீண்டும் தக்காளி விலை அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று(ஜூலை26) நிலவரப்படி, கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்கப்பட்டது.
இந்த நிலையில், தக்காளி விலை ஒரே நாளில் 30 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று(ஜூலை 27) கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சில்லறை விற்பனையில் 150 ரூபாய் முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 30 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து சென்னை கோயம்பேடு சந்தையில் இருக்கும் வியாபாரிகள் சிலர் கூறும்போது, "கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி அறுவடை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி மட்டும் ஒரு நாளைக்கு 60 லாரிகள் வரும். ஆனால், இந்த வாரம் தொடக்கத்தில் 35 லாரிகள் மட்டும் வந்ததன. இன்று 30 லாரிகளில் 400 முதல் 450 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. தினமும் 1,200 டன் தக்காளி தேவை உள்ள நிலையில் வரத்து குறைந்து வருகிறது. இதனால், தக்காளி விலை தினமும் உயர்ந்து வருகிறது. அதேப்போல் 15 கிலோ பெட்டி தக்காளி, 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது" என்றனர்.