ஒரு மனிதன் சகமனிதனால் புறக்கணிக்கப்படும் பொழுது, அடித்து ஒடுக்கப்படும் பொழுது, பல சூழ்நிலைகளால் அழுத்தப்படும் பொழுது, அவன் உள்ளிருக்கும் திறன் வெடித்துச் சிதறுகிறது. அப்போது 'புரட்சி' என்ற சொல் உதயமாகிறது.
இவ்வாறு அடித்தட்டு மக்கள் வெகுண்டெழுந்து ஆட்சி அதிகாரத்தின் சிம்மாசனங்களை அலங்கரித்த எத்தனையோ புரட்சிகளை இந்த உலகம் கண்டிருக்கிறது. எத்தனையோ புரட்சியாளர்களின் பெயர்களை உலக வரலாறு பதிவு செய்தும் இருக்கிறது. இந்த வரலாறுகளுக்கு நடுவே என்றும் ஓங்கி ஒலிக்கும் ஒரு பெயர் 'சே'!
இவர் அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோஷலிசப் புரட்சியாளர். இவரது இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா என்றாலும் கூட மக்கள் இவரை சே குவேரா என்றே அழைத்தனர். 'சே' என்ற அர்ஜென்டினச் சொல்லுக்கு தோழன் என்று பொருள். அர்ஜென்டினாவில் பிறந்த சே குவேராவை கியூபா, மெக்ஸிக்கோ, பொலிவியா என பிற நாட்டவர்களும் தோழனாக ஏற்றுக்கொள்ள காரணம், ‘ஒரு மரம் வெட்டப்பட்டால் நிழல் போய்விடுமே என்று சாதாரண மனிதன் சிந்தித்துக் கொண்டிருக்கையில், காலையில் உணவைத் தேடி வெளியே சென்ற அதில் வசிக்கும் பறவைகள் மாலையில் எங்கு அமரும்’ என்ற ‘சே’வின் சிந்தனையே அவரை உலக மக்களின் தோழனாக அடையாளப்படுத்தியது.
'சமூகத்தின் அவநிலை கண்டு பொங்கி எழுவாயானால் நீயும் என் தோழனே' என உலக மக்களை அரவணைத்துக் கொண்டு எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்பு கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால் பயணிக்கும் என கூறி சே குவேராவும் தன் பயணத்தைத் தொடங்கினார்.
இந்த எண்ணம் அவர் மனதில் உதித்தெழ காரணமாக இருந்தது தென் அமெரிக்காவைச் சுற்றி அவர் செய்த மோட்டர் சைக்கிள் பயணம்தான். மருத்துவம் படித்து முடித்துவிட்டு தன்னுடைய நண்பனான அல்பர்ட்டோவுடன் அவர் மேற்கொண்ட பயணமே ஏழ்மையின் பிடியில் சிக்கி பசியில் தவித்துக்கொண்டிருந்த மக்களை அவர் காண்பதற்கு அடித்தளமாக அமைந்தது.
அதிகார வர்க்கத்தால் அடித்தட்டு மக்கள் அடையும் அவல நிலைகளையும், உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த தொழுநோயாளிகள் மரணம் குறித்த கவலையின்றி மகிழ்சியாக கால்பந்து விளையாடுவதையும் கண்டார். அந்தத் தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் செய்துவிட்டு, தினமும் அவர்களோடு இணைந்து கால்பந்து விளையாட ஆரம்பித்தார். அப்படி விளையாடிக் கொண்டிருக்கையில் சே குவேரா மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.
அந்த உணர்வு மதுவுக்குள் மூழ்கிக் கிடந்தபோது அவருக்கு கிடைக்கவில்லை. தன் காதலியோடு பேசித்திரிந்து பொழுதைக் கழித்தபோதும், உல்லாசத்தின் உச்சநிலையை அடைந்தபோதும் கூட அவருக்கு அந்த உணர்வு ஏற்படவில்லையாம். இந்த உணர்வுக்கு என்ன காரணம் என்று சேகுவேரா எண்ணிக்கொண்டிருக்கையில் ஒடுக்கப்பட்டு தளர்வுற்று மனதில் வேதனைத் ததும்ப துடித்துக்கொண்டிருக்கும் அடித்தட்டு மக்களின் சிரிப்புதான் காரணம் என்று உணர்ந்து கொண்டார்.
இதற்கிடையில் சேகுவேரா - அல்பர்ட்டோவின் தென் அமெரிக்கப் பயணம் வெனிசுலாவில் நிறைவடைந்தது. அங்கிருந்து நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு புறப்பட்ட அவரின் எண்ணமும் பாதையும் வேறாக இருந்தது. அங்குள்ள மக்களின் நிலைகண்டு மருந்துப் பெட்டியை புறக்கணித்துவிட்டு குண்டு பெட்டிகளையும், துப்பாக்கிகளையும் எடுக்கும் எண்ணம் சேகுவேராவுக்கு வந்தது.
இந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெனிசுலாவில் இருந்து குவாத்மாலா நோக்கி தன் பயணத்தை தொடங்கினார். அங்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்ற பெண்ணின் மூலம் அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களுடன் தொடர்பு எற்பட்டது. அங்கு பிடல் காஸ்ட்ரோவுடன் ஏற்பட்ட நட்பு அவரை கியூபா நோக்கி நகர்த்தியது.
அங்கு சேகுவேரா அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், கியூபா மக்களின் குரலாகவும், பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து ஒலித்தார். துவண்டு கிடந்த கியூபா மக்களிடம், 'அடுத்தவரின் காலில் ஒருவன் வீழ்ந்து வாழ்வதை விட, அவன் எழுந்து நின்று சாவதே மேல்' என்று எடுத்துரைத்தார். எங்களால் என்ன செய்ய முடியும் என்று ஏக்கத்தோடு பார்த்த அந்த மக்களிடம் போருக்குச் செல்லும்போது, கைகளில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஒரு சுத்தமான வீரன் தனது ஆயுதத்தை போர்க்களத்திலேயே சம்பாதிக்கிறான் எனக் கூறி அந்த மக்களிடம் விடுதலை வேட்கையைத் தூண்டினார்.
போராட்டக் களத்தில் மரணத்தைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஒரு வேலை அங்கு நான் உயிரிழந்து விட்டாலும் கூட என் துப்பாக்கியை பின்வரும் என் தோழன் எடுத்துக்கொள்வான். துப்பாக்கியின் தோட்டாக்கள் எதிரிகளை நோக்கிப் பாய்ந்துகொண்டே இருக்கும் என்று கை உயர்த்திய அர்ஜெண்டினா வீரனை கியூபா மக்கள் தங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள்.
பின்னர் கியூபா இளைஞர்களையும் விவசாயிகளையும் கியூபா புரட்சிக்குத் தயார்படுத்தினார். அவர்களைக் கொண்டு கியூபாவில் அதிபராக இருந்த பாடிஸ்டாவுக்கு ‘கொரிலா’ போர் முறை போன்ற போர் யுக்திகளின் மூலம் சிம்ம சொப்பனமாக விளங்கினார். சேகுவேராவின் வித்தியாசமான போர் அணுகுமுறையால் 1959ஆம் ஆண்டு கியூபாவில் புரட்சி வென்றதையடுத்து பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபரானார். ஆனால் சேகுவேரா அரசு பதவிகளில் நாட்டம் கொள்ளாமல் அடுத்த புரட்சிக்காக பொலிவியா நோக்கி தன் பயணத்தை தொடங்கினார்.
அங்கு போராட்டத்தின் நடுவே சேகுவேராவைக் கைது செய்த பொலிவிய ராணுவம், அக்டோபர் 9, 1967ஆம் ஆண்டு வல்லெகிராண்டிக்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் வைத்து சுட்டுக்கொன்றது. அவர் அங்கு சாகடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தோற்கடிக்கப்படவில்லை.
அதற்குச் சான்றாக, "நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால், நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால், நமது இறுதிச்சடங்கில் இயந்திரத் துப்பாக்கிகளின் உறுமல்களோடும் புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்துகொள்வார்களேயானால் மரணம் திடீரென ஆச்சரியப்படுத்தும் போதுகூட, நாம் அதை வரவேற்கலாம்" என்று கூறிய சேகுவேரா, இளைஞர்களின் டிசர்ட்களிலும், கட்சிகளின் அடையாள அட்டைகளில் மட்டுமல்ல மக்களின் மனதிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் புதைக்கப்பட்டக் கல்லறையின் சுவற்றில் 'அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் சே' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அந்த 'அவர்களுக்கு' எதிராக பல சேகுவேராக்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
விதைத்தவன் உறங்கினாலும் கூட விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை!