சென்னை: மழைக் காலங்களில் மழை நீர் அண்டை மாநிலங்களுக்குப் பாய்வதையும், வீணாகக் கடலில் கலப்பதையும் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள ஏரி, கால்வாய்களை ஆழப்படுத்தவும், உரிய இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் ஜி.தேவராஜன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (டிச.16) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மைப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிப் பாதுகாப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி மண்டல, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான குழுக்களை அமைத்து 2022 பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாத புள்ளிவிவர கணக்கின்படி, 20ஆயிரத்து 150 ஆக்கிரமிப்புகளை அகற்றி 7 ஆயிரத்து 569 ஏரிகளை ஆக்கிரமிப்புகள் அற்றவையாகப் பராமரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுடன் நதி நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அவை மீறப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க உரிய அமைப்பிடம் உதவி கோரப்பட்டிருக்கிறது. நீர்நிலைகள் பழுதுபார்த்து, புதுப்பித்து மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுதும் 2 ஆயிரத்து 300 ஏரிகளை உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தி, பழைய நிலைக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது" " என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அரசு தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், "மனுதாரர் எந்த பகுதியில் அவரது கோரிக்கையை நிறைவேற்றக் கோருகிறார் என குறிப்பிட்டுத் தெரிவிக்காத நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பினை பொதுவான உத்தரவாகப் பிறப்பிக்க முடியாது. ஒருவேளை குறிப்பிட்டுச் சொல்லும் பட்சத்தில் அது பரிசீலிக்கப்படும்" எனக் கூறி தேவராஜன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: பழனி கோயிலில் பஞ்சாமிர்த பில் விவகாரம்: இந்து அறநிலையத்துறையின் மீது மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்படும்...