இது குறித்து தமிழ்நாடு அரசு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”தேசிய பெர்மிட் வைத்துள்ள வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், மேக்சி கேப் உள்பட அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரிகளை செலுத்துவதற்கான கருணை கால அளவு ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும், தாமதமாக செலுத்தப்படும் வரிகளுக்கான அபராதத்தை வசூலிப்பதும் ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
இதில் தற்போது இம்மாதம் (ஜூலை) 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துக்கும் அதுவரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன.
அதில், ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலோ அல்லது வாகன போக்குவரத்தை அனுமதிக்கும் வரையிலோ, மோட்டார் வாகன வரியை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
அதுமட்டுமின்றி அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் வரி செலுத்தும் கருணை கால அளவை ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு, போக்குவரத்து ஆணையரும் கடிதம் எழுதியுள்ளார். அதனால் அவரது கோரிக்கையை ஏற்று 31ஆம் தேதிவரை கருணை கால அளவை நீட்டித்து அரசு ஆணையிடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம்