தமிழ்நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, சென்னை மாவட்டத்தில் 15 கண்காணிப்பாளர்கள், 35 மாவட்டங்களுக்கு மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் தலைமையிலான மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள், பொது சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் நிலை மற்றும் அதற்குமேல் உள்ள மருத்துவ அலுவலர்கள் உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது பெருகிவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சில செயல்பாடுகளுக்குத் தடை விதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த்தொற்றைக் குறைக்கும் பொருட்டு, மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கள அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் (15 மண்டலம்) மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் தலைமையிலான மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள், பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் நிலை, அதற்கும் மேல் உள்ள மருத்துவ அலுவலர்களை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, 35 மாவட்டங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி அலுவலர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம், மாவட்டங்களுக்குச் சென்று கரோனா நோய்த் தடுப்புப் பணிகளை முடுக்கிவிடவும், கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தவும், தொழிற்சாலை, அலுவலகங்கள் போன்ற இடங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்வதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். 10ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் சில்லறை காய்கறிகள் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள சில்லறை காய்கறிகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல். 8) முதல் திருவிழாக்களுக்குத் தடை, வழிபாட்டுத்தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி, திருவிழாக்கள் மதக் கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்குத் தடை - தமிழ்நாடு அரசு