ETV Bharat / state

'வேளாண் விளைபொருட்கள் விற்கும்போது விற்பனைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது' - தமிழ்நாடு அரசு - விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது

சென்னை: வேளாண் விளைபொருட்கள் விற்கும்போது விற்பனைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Jun 2, 2020, 10:23 PM IST

தமிழ்நாட்டில் விவசாயிகள் தங்களுடைய வேளாண் விளைபொருட்களை எவ்வித சிரமமுமின்றி லாபகரமான விலைக்கு விற்பனை செய்து பயனடைய ஏதுவாக மின்னணு சந்தை முறைக்கு அனுமதியளித்தல், வணிகர்களின் சிரமத்தை போக்க மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம், ஒருமுனை விற்பனைக் கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட வேளாண்மை விற்பனை சார்ந்த சீர்திருத்தங்களை தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் பிப்ரவரி 2017 முதல் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் நன்மையை கருத்தில்கொண்டு, தற்போது தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987இல் கூடுதல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழ்நாடு அரசு கருதியது.

முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில், பின்வரும் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அவசரச் சட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் விற்பனைச் (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987இல் சீர்திருத்தங்களை கொண்டு வருதல். விற்பனைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 29.05.2020-க்கு பின்னர், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்தல்.

இந்த அவசர சட்டம், வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள், குளிர்பதன மையங்களிலும் விற்பனை செய்யலாம்.

விவசாயிகள் விளைபொருட்களை தங்கள் பண்ணையிலோ அல்லது உணவுப் பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கும்.

மேற்கண்ட பன்முகத்தன்மையிலான விற்பனை முறைகளில் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு விற்பனை முறையினையும் தேர்வு செய்து, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யவும், அதன் மூலமாக தங்கள் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை பெற்று பயனடையவும் இந்த அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் பொழுது அவர்களிடமிருந்து விற்பனைக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்றும் இந்த அவசரச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.