ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டநிலையில், சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு இந்தியா முழுவதும் இருக்கின்ற அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகள் அதே போன்று ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் இருக்கின்ற அனைத்து பள்ளிகளிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்காக பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று 28.02.19 யில் மத்திய அரசு அறிவித்திருந்தது.
மத்திய அரசு இந்த பொதுத் தேர்வுகளை கொண்டு வருவதன் நோக்கம் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கும், மாணவர்களுக்கும் அரசிரியர்களுக்கும் இடையேயான கற்றுத்தரும் கல்வித் தரத்தை அதிகபடுத்துவதற்கும் தான். தமிழ்நாட்டை பொருத்தவரையில் மூன்று ஆண்டுகள் இதில் விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த மூன்று ஆண்டு காலத்திற்குப் பிறகே ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்களா பெறவில்லையா என்பது பற்றி பட்டியல் வெளியிடப்படும்.
படிப்படியாக மாணவர்கள் கல்வித் திறனை மேம்படுத்திக்கொள்ள மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுத் தேர்வு முறை பெற்றோர்கள் மத்தியிலும் , மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு மாணவர்கள் உயர்நிலை பள்ளிக்கும், மேல்நிலை பள்ளிக்கும் செல்லும் போது மத்திய அரசு நடத்துகிற பொதுத் தேர்வை எதிர்கொள்ள முடியாத சூழல் இருக்கிறது.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குக்கான பொதுத் தேர்வு என்பது மாணவர்களின் ஆற்றலை பற்றி ஆசிரியர்கள் புரிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த பொதுத் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த பொதுத்தேர்வினால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த முறையால் இடைநிற்றலுக்கு ஒருபோதும் வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
12ஆம் வகுப்பு மொழித் தாள்கள் இரண்டாக இருந்ததை ஒன்றாக மாற்றுவது மாணவர்களின் நலன் சார்ந்தது என்றும், தமிழ்நாட்டை பொருத்தவரையில் எப்போதும் இரு மொழிக் கொள்கை தான் அதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை என கூறினார்.
மேலும் , இரு மொழிக் கொள்கை தொடர்பாக மாணவர்களின் உணர்வுகளையும், கல்வியாளர்களின் உணர்வுகளையும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்துள்ளார் என்று தெரிவித்த அவர், இருமொழி கொள்கை நிலைத்து இருக்க வேண்டும் என்பது தான் அதிமுக அரசின் லட்சிய பயணம் என கூறினார்.