தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது முதலமைச்சர் பிறப்பித்த சில உத்தரவுகள்:
- பொதுமக்கள் வெளியிலே செல்கின்றபொழுது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
- பொருள்கள் வாங்குகின்றபொழுது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
- வீட்டிலிருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பும்பொழுது கண்டிப்பாக கை, கால்களை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
- தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, முக்கிய கிராமங்களிலே ஒலிபெருக்கியின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வுப் பிரசாரம் செய்து இந்த நோய்ப் பரவலைக் கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எடுக்க வேண்டும்.
- சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது. ஆனால், வெளி மாநிலங்களிலிருந்து வருகின்றவர்கள் மூலமாகத் தான் நோய்ப் பரவுகின்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. வெளி மாநிலங்களிலிருந்து வருகின்றவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றபொழுது, அவர்களிடம்தான் நோய்த் தொற்று அதிகமாகக் காணப்படுகிறது. அதனால் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களோ, வேறு எவரேனும் வந்தால், அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, தொற்று ஏற்பட்டிருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
- சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம். இந்தக் கட்டுப்பாடு தொடர்ந்து இருப்பதற்கு நீங்கள் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- ஊரடங்கு உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தளர்வை ஏற்படுத்திவிடக்கூடாது. மாவட்ட ஆட்சியர்கள் எந்தவொரு தளர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென்றாலும் தலைமைச் செயலாளரைத் தொடர்புகொண்டு அவருடைய அனுமதி பெற்றுத்தான் அறிவிக்க வேண்டும்.
- தொழிற்சாலைகளுக்கு வருகின்ற பணியாளர்களைப் பரிசோதனை செய்துதான் தொழிற்சாலைகளுக்குள் அனுமதிக்க வேண்டும். தொழிற்சாலைகளிலுள்ள கழிவறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். இதனை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவிக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றி மிகச் சிறப்பாக செயல்படுத்திய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் பாராட்டிய முதலமைச்சர், தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு அரசின் சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.