கோவிட் -19 நோயினைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய உள் துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது.
இந்நிலையில் தலைமைச் செயலர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியாளருக்கும் கடிதம் மூலம் இன்று சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அதில், "நகர்ப்புற, கிராமப்புற சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவுவதற்கான தீவிரப் பகுதிகளாகக் கருதப்பட வேண்டும்.
கோவிட்-19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அவ்வப்போது கிருமிநீக்கம் செய்வதற்கும், துடைப்பதற்கும் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.
நோயாளிகள் காத்திருக்கும் பகுதி, மேசைகள், நாற்காலிகள், தேர்வு அறைகள், நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய பிற இடங்களை கிருமிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், கழிப்பறைகளை தவறாமல் சுத்தம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்.
நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிட்-19 நோயாளிகளுக்கென தனி நுழைவு, வெளியேறுதல் பாதை அமைக்கப்பட வேண்டும்.
சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க உரிய நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி - முதலமைச்சர் நலம் விசாரிப்பு