கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதையடுத்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
நோய்த் தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையை குறைக்க எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தளர்வு உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தொற்றுப்பரவலை தடுக்க குறிப்பிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது, மேலும் மாவட்டங்களில் மேற்கொண்டு வரும் மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ தேவைக் குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 60 ஆயிரம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.
சென்னையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 112இல் இருந்து 83 ஆயிரத்து 377 பேர் என உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கரோனா பாதிப்பால் 79 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 315ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் நோய் பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது வரை நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 807ஆக உள்ளது.
இதையும் படிங்க: தஞ்சையில் கரோனாவால் 9 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழப்பு!