தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக நேற்று(மார்ச்.11) வெளியிட்டது. அதன்படி, பெருந்துறை தொகுதியில் போட்டியிட கோரியிருந்த தோப்பு வெங்கடாசலத்திற்கு அத்தொகுதி கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாகப் இம்முறை எஸ்.ஜெயக்குமார் பெருந்துறை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தோப்பு வெங்கடாசலம், "பெருந்துறை தொகுதிக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஜெயக்குமார் அதிமுக கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர். அவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஆட்சியை எதிர்த்துப் போட்டியிட்டவர். அதுமட்டுமின்றி நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு எதிராக உள்ளடி வேலை செய்தவர். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அவர் மீதான புகார்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் தற்போது அதிமுகவில் தான் இருக்கிறேன். இதுகுறித்து என் தொகுதி மக்களிடம் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கிறேன். என்னை வேட்பாளராக அறிவிக்கப்படாததுக்குத் தொகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.