சென்னை: வேளாண் சட்ட மசோதா குறித்து விவாதிக்க திமுக தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று சட்டங்கள் விவசாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்திய ஜனநாயக சக்திகள் விழித்துக்கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ்சின் கொள்கை சிறு விவசாயிகளே கூடாது என்பதுதான், அதன் முதல் கட்டமாக விவசாயிகள் வருமானத்தைக் குறைத்து, விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதை தடுத்து விவசாய நிலத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
சர்வாதிகாரர்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இருக்காது. கிராமங்களை அழித்து பெரிய நகரங்களாக மாற்றுவதுதான் ஆர்எஸ்எஸ்சின் கொள்கை. அமெரிக்கா போன்ற பண்ணை முதலாளிகளை உருவாக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். எனவே இந்த சட்டத்தை நாங்கள் கடுமையாக விமர்சிக்கிறோம், எதிர்க்கிறோம்.