திமுக செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், "சுஜித் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு ஏன் ராணுவத்தை வரவழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'ராணுவ வீரர்கள் வெறும் சுடுவதற்குதான், ஸ்டாலின் அரசியல் செய்கிறார்' என பொறுப்பற்ற முறையில் விமர்சித்துள்ளார்.
சுஜித் மீட்புப் பணியைப் பார்வையிட பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் சென்றுள்ளார். பேரிடர் விவகாரம் அமைச்சர்கள் செய்யும் பணி இல்லை. அவர்களுக்கு அனுபவமும் இருக்காது. இந்த அரசு பல தவறுகளை செய்துள்ளது.
போராட்டம் செய்துவரும் மருத்துவர்களை அரசு அழைத்துப் பேச வேண்டும். பல சமயத்தில் போராட்டக்காரர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேச தவறியுள்ளது. இது போராடுபவர்களை கோபம் அடையச் செய்யும்" என்று தெரிவித்தார்.