இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2020 ஆண்டிற்கான சேர்க்கைக்கு www.skilltraining.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் செப்டம்பர் 15ஆம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, ஆன்லைன் மூலம் செப்டம்பர் 17ஆம் தேதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கான மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் செப்டம்பர் 18ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் 16ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்களின் தரவரிசைக்கு ஏற்ப அவர்களுக்கு கலந்தாய்விற்கு ஒதுக்கப்பட்ட தேதி எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ஒதுக்கீட்டு முன்னுரிமை விண்ணப்பதாரர்களுக்கும், 23, 24, 25 ஆகிய நாள்களில் பொது கலந்தாய்வும் நடைபெறும்.
கலந்தாய்வுகள் நடைபெறும் நாள்களில் விண்ணப்பதாரர்கள் www.skilltraining.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கு விருப்பம் உள்ள 25 தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூன்று நாட்கள் அவகாசத்திற்குள் தங்களுக்கு முன்னுரிமை வரிசைகளில் மாற்றம் செய்துகொள்ளலாம்.
கலந்தாய்வுக்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் முன்னுரிமை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவுகளுக்கு தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்படும். அதைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக மாணவர்கள் சேர்க்கை கட்டணம் பெறப்பட்டு உறுதிசெய்யப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பி.ஆர்க் படிப்பில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்