சென்னை: 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2024' தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைக்க சென்னை வருகை தந்துள்ளார். மேலும், தமிழகத்தில் தங்கி 3 நாட்கள் பயணமாக திருச்சி, ராமேஸ்வரம் செல்ல உள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி இன்று மாலை பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட நிலையில், சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி ஹெலிகாப்டரில், ஐ என் எஸ் அடையார் புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து காரில், நேரு விளையாட்டு அரங்கிற்குச் செல்லும் பிரதமர், அங்கு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்து, அந்த விழாவில் கலந்து கொண்டு பேச உள்ளார்.
அதன் பின்பு இரவு 7.45 மணி அளவில், நேரு விளையாட்டு அரங்கில் இருந்து காரில் புறப்பட்டு, கிண்டி ஆளுநர் மாளிகை வருகிறார். இரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கி, ஓய்வு எடுக்கிறார். நாளை காலை 9 மணி அளவில், கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்கிறார்.
அதன்பின்பு பிரதமர், தனி விமானத்தில் காலை 9.25 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, திருச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அதன் பின்பு, பிரதமர் ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்கிறார். ஸ்ரீரங்கம் கோயில், ராமேஸ்வரம் கோயில் ஆகியவற்றில் வழிபாடுகள் நடத்திவிட்டு, ஞாயிறு அன்று மதுரையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இதை அடுத்து, சென்னை விமான நிலைய வளாகப் பகுதிகள் முழுவதிலும், குறிப்பாக சென்னை பழைய விமான நிலையப் பகுதிகளில், நேற்று நள்ளிரவில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், தற்போது 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையத்திற்கு உள்ளே வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. விமான நிலையங்கள் சுற்றியுள்ள சாலைகளில் உள்ள வாகனங்கள் நிறுத்துவதையும் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு - திமுக அறிவிப்பு