சென்னை: ஆந்திராவிலிருந்து பேருந்து மூலம் சென்னை ரெட்ஹில்ஸ்-க்கு வந்த 3 நபர்கள், அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்துள்ளனர். அப்போது ஆட்டோவில் வந்த நபர்களின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னா என்ற சுந்தரராஜ், ஆட்டோவை நேராக யானைக்கவுனி காவல் நிலைய வாசலில் நிறுத்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்த காவலர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு ஆட்டோவில் இருந்த மூன்று நபர்களும், ஆட்டோவில் இருந்து இறங்கி அந்தப் பகுதியில் சென்ற மற்றொரு ஆட்டோவில் ஏறி உள்ளனர். பின்னர் நடந்த சம்பவத்தை காவலர்களிடம் கூறி, ஆட்டோ டிரைவர் சுந்தர்ராஜன் தனது ஆட்டோவில் காவலர்களை அழைத்துக் கொண்டு தப்பிச் சென்ற நபர்களின் ஆட்டோவை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதையடுத்து, ஆட்டோவில் இருந்த 3 பேரையும் போலீசார் பிடித்து, பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் முறையான ஆவணங்கள் இன்றி, கட்டுக்கட்டாக சுமார் 2 கோடியே 1 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அந்த மூன்று நபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அவர்கள் மூன்று பேரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த யாசிர், தாவுத், பைசல் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் பணத்துக்கு உண்டான ஆவணங்கள் எதும் இல்லை என்பதால், போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர். இதையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள், அந்த மூவரிடமும் இருந்தது ஹவாலா பாணமா, அல்லது தெலுங்கானா தேர்தலுக்கு கொண்டு செல்லப்படுகிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "சத்துவாச்சாரியில் 10 கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதி" - அமைச்சர் முத்துசாமி!