தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் பசும்பால் கொள்முதல் விலை 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 32 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டு, 41 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு திங்கள் முதல் அமலுக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் பால் விலையை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
- மக்களின் அடிப்படை உணவுப்பொருளான பால், உணவுப்பொருளாக மட்டுமல்லாமல் மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது. ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு சத்துணவாக பால் இருக்கிறது. இந்நிலையில் இந்த பால் விலையேற்றம் என்பது அக்குடும்பங்களின் தலையில் சுமையை ஏற்றும் செயல். எனவே தமிழக அரசு பால்விலையேற்றத்தை திரும்பப் பெறவேண்டும்.
- பால் விலை உயர்வுக்கு மாட்டுத் தீவினங்களின் விலை உயர்வு மற்றும் இடுபொருள்களின் விலைஉயர்வு உட்பட பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அது ஏற்புடையதல்ல. ஆவின் நிறுவனத்தை முறைப்படுத்தினாலே பால் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது.
- மேலும் அரசு மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற இல்லங்கள், காப்பகங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையை விட குறைந்த விலையில் பால் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்