சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் Coop Bazaar என்ற கூட்டுறவுச் சந்தை செயலியைத் தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ''தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் வங்கி சேவை மற்றும் விவசாயத்துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மலிவான விலையில் நுகர்வோருக்கு கிடைத்திடும் வகையில் எளிதாக இல்லங்களில் இருந்தவாறே இந்த Coop Bazaar செயலி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். எளிய முறையில் குறைவான சேவைக் கட்டணத்துடன் Coop Bazaar செயலி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 8 கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தி செய்யும் 64 வகையிலான பொருட்கள் இந்த Coop Bazaar செயலி மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது'' என்றார்.
மேலும், சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலோடு இந்த Coop Bazaar செயலி பற்றி அறிவித்தோம் எனவும்; தற்போது அதை இன்று செயல்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார். ''சமீபத்தில் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது என்றும்; தக்காளி விளையும் பகுதிகளில் வெப்பம் மற்றும் மழை காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது.
தக்காளி உயர்வால் பெரும்பாலான மக்கள் சமையலில் தக்காளியை குறைக்கத் தொடங்கிவிட்டனர். தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் நியாயவிலைக்கடைகளில் தேவையான அளவிற்கு தக்காளி அனுப்பப்பட்டு வருகிறது.111 மையங்களில் விற்கப்படுகிறது. சென்னை,தாம்பரம்,ஆவடி மாநகராட்சிகளில் முதற்கட்டமாக அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் விநியோகிக்கப்படுகிறது'' என்றார்.
''இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும்,அகில இந்திய அளவில் தக்காளி விலை அதிகரித்து உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையை இந்தியாவிலுள்ள பெரு நகரங்களில் இருப்பவர்கள் பாராட்டுகிறார்கள்'' எனவும் தெரிவித்தார்.
மேலும், பிற மாநிலங்களில் தக்காளி தட்டுப்பாடுகளுக்கு மாநில அரசுகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவித்தார். ''மயிலாப்பூர் உள்ளிட்ட கடைகளில் செயலின் பட்டியலில் உள்ள கடைகளுக்கு தக்காளி அனுப்பப்பட்டு வருகிறது. 82 நியாய விலைக்கடைகளில் தக்காளி விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது தக்காளி விலை தற்போது குறைந்திருக்கிறது. மேலும், நியாய விலைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60க்கு விற்கப்படுகிறது. மக்கள் மத்தியில் பரபரப்புக்காக விலையை அதிகமாக கூறக்கூடாது. தக்காளி பிற மாவட்டங்களிலும் நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது'' எனத் தெரிவித்தார்.
மேலும், மளிகைப்பொருட்கள் தேசிய அளவில் விலை உயர்ந்திருக்கிறது. இந்த விலையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தலையிட வேண்டும் எனத் தெரிவித்தார். தக்காளியை வியாபாரிகள் யாரும் பதுக்கவில்லை எனவும்; அவர்களின் முழு ஒத்துழைப்பால் நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாடாளுமன்றத்தேர்தலில் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - உயர் நீதிமன்றம்!