சென்னை மாவட்டம் மீனம்பாக்கம் அடுத்த நங்கநல்லூர் 39ஆவது தெருவில் வீடு வாடகை எடுத்து வசித்து வருபவர் கிஷோர் குமார்(43). இவரது மனைவி சாய் பிரசன்னா (40). கிஷோர் குமார், நங்கநல்லூர் 28ஆவது தெரு ஆனந்தி குடியிருப்பில் அலுவலகம் ஒன்று வைத்து, சானிடைசர் மற்றும் மாஸ்க் போன்ற உபகரணங்களை விற்பனை செய்து வருகிறார்.
இவரது மனைவி சாய் பிரசன்னா அதேபகுதியில் ரத்த பரிசோதனை மையம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை கிஷோர் குமார் அவரது மனைவியிடம் அலுவலகத்திற்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மதியம் 12 மணியளவில் அலுவலகப் பணியாளர் ரேவதி சென்று, பார்த்தபோது அலுவலகம் உள்பக்கம் பூட்டி இருந்தது.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கிஷோர் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரேவதி பழவந்தாங்கல் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அத்தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் கிஷோர் குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரனையில், கிஷோர் குமார் வங்கியில் சுமார் ஒரு கோடிக்கும் மேல் தொழில் சம்பந்தமாக கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொழில் நஷ்டம் காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 6 வருடங்களாக தேடப்பட்டுவந்த கொலை குற்றவாளி கைது!