புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று முன்தினம்(ஜூன் 12) நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்க வரும்பொழுது துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி உடன் வருகிறார்.
அப்பொழுது நமச்சிவாயம் சற்று பின்னோக்கி வருகிறார். அவருக்கு வழிவிடும் விதமாக நமச்சிவாயத்தின் பாதுகாவலர் ராஜசேகர் என்பவர் முதலமைச்சர் ரங்கசாமியை இடது கையால் தள்ளி விடுகிறார். இதனால் நிலை தடுமாறி பின்னோக்கி செல்லும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சுதாரித்துக்கொள்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. மேலும் இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாவலராகப் பணிபுரியும் ராஜசேகர், கடந்த காங்கிரஸ் அரசில் நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பாதுகாவலராகப் பணிபுரிந்து உள்ளார் என்பதும், திருபுவனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து தற்போது மீண்டும் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயத்தின் பாதுகாவலராகப் பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஒற்றைத்தலைமை அவசியம் என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர்' - ஜெயக்குமார்